சனி, 4 ஜூன், 2011

NOOLAGAM ORU KOVIL

வெ. சந்தனகிருஷ்ணன்
நூலகம் என்னும் அறிவுத் திருக்கோயில்
நூலகம் என்பது மனிதர்களின் பெரிய சொத்து. அது மனிதனை, மனிதனாக்கும், அறிஞனாக்கும், விஞ்ஞானியாக்கும்.
ஒரு நூலகத்தில் இரண்டு இலட்சம் நூல்கள் உள்ளது என்றால், அந்த நூலகத்தில் இரண்டு இலட்சம் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள்.
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும் என்பார்கள். மேலும் ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன என்பார்கள். ஏனெனில் நூலகம் மனிதனைப் பண்படுத்தும், நெறிப்படுத்தும், மகிழ்வூட்டும்.
அண்ணாவும் நூலகமும்
அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு. அறிஞர் அண்ணா ஆலயம் சென்றது இல்லை . ஆனால் நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் தான் அறிஞராக மாற முடிந்தது.
நெப்போலியனின் நடமாடும் நூலகம்
சிறு வயதில் இருந்தே புத்தகங்களை காதலிக்கத் துவங்கிவிட்டார் நெப்போலியன். இவரது அறிவுத் தேடல் எப்போதுமே அடங்கவில்லை. பிரெஞ்ச் சக்ரவர்த்தியாக கன நேரமும் ஓய்வின்றி கடுமையாக உழைத்த நாட்களிலும் சரி, செயின்ட் ஹெலெனாவில் இருந்த சிறைச்சாலையில் தன் இறுதி நாட்களை கழித்த போதும் சரி. அவர் எப்போதும் புத்தகங்களை விட்டு விலகியதில்லை. நெப்போலியன், தனது  அரண்மனையில் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை பராமரித்து வந்தார்.
1808ஆம் ஆண்டுகளில் மிக இக்கட்டான போர் தருணத்தில் படைகளை நடத்திச் சென்றிருந்த நெப்போலியன் தன் நூலக பொறுப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நடமாடும் நூலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். 1000 புத்தகங்களை மார்ஜின்கள் எதுவும் இன்றி மிகவும் சிறிய எழுத்துருக்களால் பிரின்ட் செய்து அனுப்பவும் என்று இருந்தது. அதன்படி, அவர் எங்கு படைகளுடன் சென்றாலும், அங்கு இந்த நூலகமும் இருக்கும்.
மாவீரன் பகத்சிங், அக்பர்
மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக் கொண்டிருந்தார். 10-ஆம் நூற்றாண்டு பாரசீக மன்னன் அப்துல் காசிம் இஸ்மாயில் 1,70,000 நூல்கள் வைத்து இருந்தார். அவரது படைத்தளபதிகள் படையெடுத்துச் செல்லும்போது நூல்களைத் தான் அள்ளி வருவார்களாம். அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய அறிஞராக உருவானார்.
வாசிக்கும் பழக்கத்தை சுவாசிப்பதைப் போன்று வழக்கப்படுத்துவோம்.
நூலகம் செல்வோம்.
ஆரோக்கியமான மனித சமுதாயம் படைப்போம்.